கடலூர் மாவட்டத்தில் சமீபத்திய வரலாறு காணாத வெள்ளப்பாதிப்பிற்கு சாட்சியமாய் விளங்குகிறது விசூர் கிராமம். இம்மாவட்டத்தில் கடந்த நவ.8,9 தேதிகளில் பெய்த வரலாறு காணாத கனமழை மாவட்டத்தை புரட்டிப்போட்டுவிட்டது. மழை வெள்ளத்தால் பேரழிவை ஏற்படுத்த முடியுமா என்று கேட்பவர்கள் கண்டிப்பாக நெய்வேலி அருகே உள்ள விசூருக்குச் சென்றால் அது உண்மை என்றுபுரிந்துகொள்வர். ஒட்டுமொத்த கிராமத்தையே தலை கீழாக புரட்டி போட்டுள்ளது காட்டாற்று வெள்ளம். மழை வெள்ளத்திற்கு 2 பேரை காவு கொடுத்துள்ள இந்த கிராமத்தினர் தற்போது தாங்கள் உயிர் பிழைத்திருப்பதை ஒரு அதிசயமாக நினைக்கிறார்கள். அதற்கு காரணம் உள்ளது. வெள்ளம் பாதித்த விசூருக்குச் சென்ற போது பாப்பான் வெள்ள வாரி ஓடையின் அருகில் உள்ள ரேசன்கடையின் மீது முறிந்த நிலையில் மின்கம்பம் சாய்ந்து கிடந்தது.
அந்த ஓடையில் தேங்கியிருந்த மணலை 5 ராட்சத இயந்திரங்கள் அகற்றிக்கொண்டிருந்தன. பாப்பான் வெள்ள வாரி ஓடையின் அருகில் மற்றொரு சிறிய ஓடை புதிதாக தோன்றியுள்ளது. அந்த ஓடையானது கிராம மக்கள் நட்டு வைத்திருந்த 500 தேக்கு மரக்கன்றுகளையும், 7 பெரிய தேக்கு மரங்களையும் அடியோடு விழுங்கிவிட்டது. வீட்டின் ஒருபகுதியையும் இடித்து விட்டு புதிய பாதையை அந்த ஒடை ஏற்படுத்தியுள்ளது. அருகில் இருந்த மிகப்பெரிய மாமரத்தை சுவடே தெரியாமல் பெயர்த்து எடுத்துச் சென்றதோடு, ஏர் உழுவதற்கு பயன்படுத்தப்படும் இயந்திர கலப்பைகளும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுவிட்டன.
ஜலசமாதியான வீடுகள்
பழனியம்மாள் என்ற பெண், “எங்கள் வீட்டையும் வந்து போட்டோ எடுங்கள் ’’என்று அழைத்து சென்றார் அவர் காட்டிய இடம் சமதளமாகவே இருந்தது, அவரிடம் எங்கே உங்கள் வீடு என்று கேட்டபோது “ இங்குதான் என்னுடைய குடிசை வீடு இருந்தது, கடந்த 8ஆம் தேதி காலை 10 மணிக்கு வெள்ளம் வந்தபோது உயிருக்கு பயந்து கட்டியிருந்த துணியோடு ஓடினோம். மாலை 4 மணி அளவில் தண்ணீர் குறையத் தொடங்கியது வீட்டில் உள்ள பொருட்களை எடுத்து பாதுகாப்பாக வைக்கலாம் என்று வந்தபோது வீடு இருந்த இடமே தெரியவில்லை’’ என்றார். என் வாழ்நாள் முழுவதும் சேமித்து வைத்திருந்த அனைத்து பொருட்களையும் வெள்ளம் அடியோடு அடித்துச் சென்று விட்டது. தற்போது சொந்த வீட்டை இழந்துவிட்டு அரசுப்பள்ளியில் ஒதுங்கியிருக்கிறோம் என்று அவர் கண்ணீருடன் தெரிவித்தார்.
வீட்டையே காணோம்
ஜோதி லட்சுமி என்பவர் கூறும் போது, என்னுடைய ஒட்டு வீட்டின் சுவடே இல்லை, ஒரு ஓட்டு வீடு இருந்ததற்கு அடையாளமாக ஒன்று, இரண்டு ஓடுகள் மட்டுமே எஞ்சியுள்ளதாக அவர் கூறினார். அப்பகுதியைச் சேர்ந்த பலர் தங்களது வீடு இருந்த இடத்தினை அடையாளம் மட்டுமே காட்டமுடிகிறது. இன்னும் சிலர் அவரவர் தான் குடியிருந்த வீடு இருந்த இடத்தை தேடி வருகின்றனர். தப்பிய வீடுகளில் வீட்டினுள் சுமார் 5 அடி வரைக்கு செம்மண் தேங்கியுள்ளது. அந்த மண்ணை வீட்டிலிருந்து அகற்றிய பின்னரே வீட்டின் சேதம் குறித்து தெரிய வரும். மேலும், ஏராளமான வீடுகள் அந்தரத்தில் தொங்குவதையும் பார்க்க முடிகிறது.
தண்ணீரின் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் வீட்டின் அடிமட்டம் சரிந்து முன்பகுதி மணலுக்குள்ளும் பின்பகுதி அந்தரத்திலும் தொங்குகிறது. தனது குடிசை இங்கே தான் இருந்தது என்று ஒரு பெண்மணி அழுகையுடன் சொன்ன போதும் அதற்கான தடயம் கூட அங்கில்லாத அளவிற்கு சிறிய அளவிலான மண்மேட்டை மட்டுமே காணமுடிந்தது. இங்கேதான் சிமெண்ட கான்கிரீட்டால் அமைக்கப்பட்டிருந்த முக்கிய சாலை உள்ளது என கூறினால் நம்ப முடியவில்லை. சுமார் 6 அடி உயரத்திற்கு மண்மேடாகி ஏதோ
நிலநடுக்கம் ஏற்பட்டதைப்போன்று காட்சியளிக்கிறது.
வாழ்நாளில் பார்த்ததில்லை
“நவ.9ஆம் தேதி காலை 10 மணிக்கு திடீரென வந்த வெள்ளம் மாலை 4 மணி வரையில் அதே வேகத்துடன் சென்றது. நாங்கள் உயிருடன் இருப்பதையே இன்னும் நம்பமுடியவில்லை என்று கிராம மக்கள் சிலர் தெரிவித்தனர். எங்களது வாழ்நாளில் இப்படிப்பட்ட மழை வெள்ளத்தை பார்த்ததில்லை என்றும் புளிய மரத்தின் மீதும் மொட்டை மாடியின் மீதும் ஏறி நின்று உயிர் பிழைத்ததாக ஊர் பெரியவர்கள் கூறினார். விசூர் கிராமத்தில் வீடுகள் மட்டுமல்ல, அம்மக்களின் வாழ்வாதாரமாக உள்ள விவசாய நிலங்களும் மண்மேடாக மாறிவிட்டது. வெள்ளம் அடித்துவந்தபோது சகதி முழுவதும் நிலங்களில் தேங்கிவிட்டது. அறுவடைக்கு 500 ஏக்கரில் தயாராக இருந்த மரவள்ளிக் கிழங்கு அப்படியே அழிந்துவிட்டது. 500 க்கும் மேற்பட்ட ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நெல் சேதமடைந்துவிட்டது. இதேபோல் உளுந்து, முந்திரி உள்ளிட்டவைகளும் சேதமடைந்துவிட்டன.ஒருபருவம் போய்விட்டால் அடுத்த பருவத்தில் பார்த்துக்கொள்ளலாம் என்று நினைக்கக்கூட முடியாத அளவிற்கு சேதம் ஏற்பட்டுள்ளதால் நிலத்தை சீரமைக்க சில ஆண்டுகள் ஆகும். இந்த கிராமத்தில் ஒருசிலரது வீடுகளில் டிராக்டர், டிரைலர், உழவு உபகரணங்கள் மண்ணில் புதைந்துள்ளன.இவ்வளவு பாதிப்பு ஏற்பட்ட பிறகும் வெறும் சோறு மட்டுமே வழங்கப்பட்டு வருவதாகவும், பாதிப்புகள் குறித்த கணக்கெடுப்பு இன்னும் தொடங்கவில்லை என்றும் விவசாயிகள் கூறினர். மின் கம்பங்கள் சாய்ந்து கிடப்பதால் மின்சாரமும் துண்டிக்கப்பட்டுள்ளது. அரசு எவ்வளவு நிவாரணம் கொடுத்தாலும், என்ன உதவிகள் செய்தாலும் இந்த கிராம மக்கள் மீண்டும் பழைய நிலைக்கு திரும்புவதற்கு இன்னும் 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகும். மேலும் தங்களது வாழ்வில் மறக்கமுடியாத பல செய்திகளை இந்த மழையும் வெள்ளமும் சொல்லிவிட்டுச் சென்றுள்ளதாக அம்மக்கள் கருதுகிறார்கள். தமிழகத்தில் 2015-ம் ஆண்டு கோரமான வெள்ளத்தின் அடையாளமாக விசூர் கிராமம் பதிவு செய்யப்படும் என்பதில் ஐயமில்லை.- வ.சிவபாலன்(http://theekkathir.in/)
Also see http://www.newindianexpress.com/states/tamil_nadu/Houses-Ravaged-Visur-Counts-Losses/2015/11/16/article3130495.ece
No comments:
Post a Comment